Saturday, October 3, 2020

1: ரிஷி மூலம்!


இது நான் செய்த, செய்து  கொண்டிருக்கும் வாழ்க்கைப் பயணங்களில்

ஆன்மீகம் தொடர்பான பயணங்களைப் பற்றிய கட்டுரைத் தொடர்.


எழுதத் தொடங்கு முன் பல பாடல் வரிகள் மனத் திரையில் ஓடின.  அவற்றில்

முதலாவது ஆத்ம சக்தி என்ற சொல்லைக் கொண்ட கவி வரிகள்.  முதல் சில வரிகளுடன், முழுவதும் கேட்க சுட்டியும் கொடுத்திருக்கிறேன்:


சா ந்தி நிலவ வேண்டும்- ஆத்ம

சக்தி ஓங்க வேண்டும் உலகிலே

காந்தி மகான் கட்டளை அதுவே

-- இராகம்: திலங்க்  இயற்றியவர்: சேதுமாதவ ராவ்

https://youtu.be/sbYlstnjy2M

இப்பாடல் மகாத்மா காந்தி மறைவுக்குப் பின் அஞ்சலி செய்முகமாகப் பாடிய பாட்டு.  அந்நாட்களில் மிகப் பிரபலம்.

ஆத்ம சக்தி என்றால் என்ன?  இந்தக் கேள்வி அந்த நாட்களில் தோன்றவில்லை!  இப்பொழுது தோன்றுகிறது - ஆனால் சரியான பதில் சொல்ல முடியாது.  இன்னும் அதை அடையவோ, உணரவோ இல்லை என்பது தான் காரணம்!

ஆன்மீகப் பயணம் என்பது ஆன்மீகம் பற்றித் தேடிச் செய்த, செய்யும் பயணமா?

அல்லது ஆன்மீக வழியில் செய்த, செய்யும் பயணமா? என்ற கேள்விகள் வருகின்றன.

ஆன்மீகம் பற்றிய தெளிந்த அறிவு இல்லாமல் ஆன்மீக வழியில் வாழ்க்கைப் பயணம் செலுத்த முடியாது.  அதே நேரம், தெளிந்த அறிவு வரும் வரை ஒத்தி வைப்பது சரியில்லை.  ஆகவே என் பயணங்கள் தேடலும், தேடிய வரை வாழ்க்கையில் பின்பற்ற முயலுவதுமாக அமைந்தன!


எங்கு, எப்படி என் தேடல் தொடங்கியது?

இதைத் திட்ட வட்டமாகச் சொல்ல முடியவில்லை. 

ஆத்ம சக்தி பற்றி முதல் முதல் கேட்டது 1971-ம் ஆண்டு.  சென்னை இராயப்பேட்டையில் திரு. வி.க சாலையில் (அந்நாளில் இராயப்பேட்டை ஹை ரோடு) ஒரு மாலை நானும் வேதாவும் வெளியே சென்று விட்டுத் திரும்பி வந்து

கொண்டிருக்கிறோம்.  கிழக்குப் பக்க நடைபாதையில், வெங்கடாசலம் தெரு அருகே இருக்கிறோம்.  அச்சமயம் எதிர் வரிசையில், கிழக்குப் பார்த்த ஒரு கட்டடத்தில் பெரிய எழுத்துக்களில் “தபஸ் யோகி சி. கே. சிவராமகிருஷ்ணன்: தியானப் பயிற்சி” என்று பொருள் தரும் வகையில் ஆங்கிலத்தில் இருப்பது வேதாவின் கண்களில் படுகின்றது.  அதை என் கவனத்திற்குக் கொண்டு வருகிறாள்.

மறு நாள் அங்கு சென்று விசாரிக்கிறேன்.  இரண்டு மாடி தாண்டி, மொட்டை மாடியில் சிலர் இருந்தார்கள்.  தபஸ் யோகி மூலக் கடுப்பு காரணமாக அறுவை சிகிச்சை முடிந்து, ஓய்வில் இருப்பதால் இன்னும் ஒரு வாரம் செல்லும் என்று கூறினர்.

ஒரு வாரம் பொறுத்து மீண்டும் சென்றேன்.  தபஸ்யோகி இருந்தார்.  ஆனால், அப்பொழுதுதான் சிகிச்சையிலிருந்து மீண்டிருப்பதால், சில காலம் தபஸ் (தியானம்) செய்யாததால் தீக்ஷை அளிக்கும் சக்தி முழுதும் வரவில்லை என்றார்.  அன்றேயோ (என் வற்புறுத்தலினால்), பின் ஒரு நாளோ தீக்ஷை அளித்தார்.

அந்த தீக்ஷை பற்றிய சுருக்கமான விவரங்களையும் அதிலிருந்து அடுத்த பயணம் தொடர்ந்த  விவரங்களையும் அடுத்த பகுதியில் சொல்ல  இருக்கிறேன்.

ti Nilava Vendum சாந்தி நிலவ வேண்டும்


No comments:

Post a Comment

3. தாரணை ~ தியானம்

ஓரு நாள் தபஸ்யோகியிடம் “கான்ஸ்ட்ரெண்டேஷனுக்கும் (தாரணை) மெடிட்டேஷனுக்கும் (தியானம்) இடையே என்ன வேறுபாடு” என்று கேட்டேன்.  இது தியானப் பயிற்ச...